வருமானமின்றி தவிப்பு! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! மிகுந்த வேதனையில் சீமான்!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin auto meter issue
தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை 1.8கி.மீ தூரத்திற்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது.
அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆட்டோ வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் ஆட்டோ ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆட்டோகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், ‘ஆட்டோகளுக்கான பயணக் கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்’ என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஆட்டோ ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
மேலும், ஆட்டோ வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கட்டண உயர்வு உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள ஆட்டோ கட்டண உயர்வினை மாற்றி அமைக்க வேண்டும், இணைய வழி அபராதங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறேன். மேலும், ஆட்டோ சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோலக் குறைந்த பிடித்த தொகையில் ‘ஆட்டோ சேவைக்கான முன்பதிவு செயலியை’ அரசு சார்பில் உருவாக்கி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin auto meter issue