அதிமுகவுக்கு மூடுவிழா! எடப்பாடிக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி! சபதம் போட்ட டிடிவி தினகரன்!
ADMK EPS AMMK TTV Dhinakaran
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "எடப்பாடியிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்பதுதான், நாளை ஜெயலலிதா நினைவு நாளில் எங்களது சபதம்.
எடப்பாடியிடம் இருக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தூக்கத்தில் இருந்தால் 2026ல் அதிமுகவுக்கு மூடுவிழாதான். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணி ஆட்சிதான் அமையும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக திருவண்ணாமலை அருகே திறக்கப்பட்ட 90 நாட்களில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தரமற்ற பாலங்களை கட்டி, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிபட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் தொண்டமானூர், கிருஷ்ணாபுரம், பெருந்துறைப்பட்டு, எடத்தனூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு அத்தியாவசியத் தேவைகளுக்காக சுமார் 15கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
15.90 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உயர்மட்ட பாலம் 90 நாட்களுக்குள்ளாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மொத்த பாலங்களின் தரத்தையும், உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ஏற்கனவே திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது வெள்ளத்தில் உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டிருப்பது அந்த புகார்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தரமற்ற முறையில் பாலத்தை கட்டி பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு , இனிவரும் காலங்களில் கட்டப்படும் பாலங்களின் உறுதித்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
ADMK EPS AMMK TTV Dhinakaran