எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! "சமீர்" என்ற பெயரில் மின்னஞ்சல்!
ADMK EPS Bomb Threat
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு, "சமீர்" என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம், மதியம் ஒரு வெடிகுண்டு வீடில் வெடிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஆர்டிஎக்ஸ் வகை வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அதிரடிப் படையுடன் சேர்ந்து பாதுகாப்பு வளையம் அமைத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்ட வெடிகுண்டு தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்னஞ்சல் அனுப்பிய நபர் தொடர்பான தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன.
இதேபோல், 2018ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் அவரது மீது வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.