2 கல்லூரி மாணவிகள் சிகிச்சையில்..! அப்பவே சொன்னானே, கேட்டீங்களா? - CM ஸ்டாலினை கடுமையாக எச்சரித்த எடப்பாடி!
ADMK EPS condemn to DMK CM MK Stalin TNGovt
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள வேளாண் நிலங்களின் பரப்பளவு, அதன் வகைபாடு, சாகுபடி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் முறையில் நிதி ஒதுக்கீடு செய்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களும் இக்கணக்கெடுப்பை முடிக்க அறிவுருத்தியுள்ளது.
பல மாநிலங்கள் இப்பணியை வருவாய் துறை மூலமாகவுவோ அல்லது தனியார் ஏஜென்சிகள் மூலமாகவோ மேற்கொண்டுள்ள நிலையில், நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரி மாணவர்களைக் கொண்டு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், இப்பணிகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன், அவர்கள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்;
எனவே, உடனடியாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளை இப்பணியிலிருந்து விடுவித்து, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதியிலிருந்து கூடுதல் மதிப்பூதியம் வழங்கி இப்பணியை குறித்த காலத்தில் முடிக்க பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை எனது அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் நிர்வாகத் திறனற்ற அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம் அரவிந்தர் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லுரியில் B.Sc Hons (Agri) இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் செங்கம் வட்டம், வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் நில கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வரப்பின் மீது நடந்து சென்றபோது விஷப்பாம்பு கடித்து, ஆபத்தான சூழ்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்றொரு மாணவி குளவியால் கொட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை இதுபோன்ற ஆபத்தான பணிகளில் ஸ்டாலினின் திமுக அரசு ஈடுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். அதை விடுத்து மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது.
எனவே இந்த விடியா முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள நிதியிலிருந்து வருவாய்த் துறையோ அல்லது தனியார் துறையிடமோ இப்பணியை ஒப்படைக்கவும், வேளாண் கல்லுரி மாணவ, மாணவியர்களை உடனடியாக இப்பணியிலிருந்து விடுவிக்கவும் வலியுறுத்துகிறேன்.
இல்லையெனில் பாதிக்கப்பட்ட வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பாக அதிமுக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்று இந்த அரசை எச்சரிக்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS condemn to DMK CM MK Stalin TNGovt