உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை - எடப்பாடிக்கு ஓபிஎஸ் பதிலடி! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித் துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும். 

இந்தத் திட்டத்திற்கு, தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதா அவர்களையே சாரும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் ஜெயலலிதா அவர்கள்.

மேலும், 07-08-2015 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை ஜெயலலிதா அவர்கள் பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினார்கள். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் ஜெயலலிதா அவர்கள். இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா அவர்கள், அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

ஜெயலலிதா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, அவர்களின் ஆளுமை காரணமாக, அவர்களின் பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. 

தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா அவர்களின் பாதையில் நடைபெற்ற ஆட்சி, ஜெயலலிதா அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. 

ஜெயலலிதா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. அம்மா அவர்களின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான். 

இன்றைக்கு, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்க் காரணம் இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள்தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது" என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK JJ OPS EPS


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->