#BREAKING : திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக-வில் இணைகிறார் கோவை செல்வராஜ்.!
ADMK kovai Selvaraj join DMK today
அதிமுகவிலிருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் கூறியிருந்தார். இந்த கருத்தால் கோவை செல்வராஜ் விரைவில் திமுகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கோவை செல்வராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "என்னோட 50 வருட அனுபவத்தில் எனக்கு எல்லா கட்சியோட வரலாறும் தெரியும். இனி இவர்களோடு சேர்ந்து பயணித்தால் கேவலம் தான். எனவே அதிமுக வேண்டாம் என முடிவு செய்து விட்டேன்.
நல்லா பழகிட்டு பிடிக்கலைன்னா ஒதுங்குறது தான் புத்திசாலித்தனம். திமுக வெறுக்க கூடிய கட்சி இல்லை. முதல்வர் ஸ்டாலின் நன்றாக செயல்படுகிறார். எம்ஜிஆர் முதலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். தற்பொழுது எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாவின் நூறாவது ஆண்டு விழா நடைபெறுகிறது.
இதுவரை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அதற்காக விழா எடுக்கவில்லை.ஆனால் முதல்வர் ஸ்டாலின் அந்த அம்மாவிற்காக விழா எடுத்துள்ளார். திமுகவில் மட்டும் தான் இன்றைக்கும் திராவிட பாரம்பரியம் உள்ளது.
அதனால் திமுகவில் இணைவது தப்பில்லை. என்னோட நண்பர்களுடன் கலந்து பேசி எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்ற பார்த்துவிட்டு முடிவெடுப்பேன்" என அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை செல்வராஜ் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளார்.
திமுகவில் இணைந்து கொள்வதற்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வருகை தந்துள்ளார். கோவை செல்வராஜ், அதிமுகவிற்கு முன், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK kovai Selvaraj join DMK today