87+8+1 = 107 எண் கணித வித்துவான், உளறல் மன்னன், துண்டுச் சீட்டு புகழ் பொம்மை முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவை அமைச்சர் தானே - ஆர்.பி உதயகுமார் பதிலடி!
ADMK RB Udhayakumar Reply to MDK Minister Rahupathy
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நீண்டகாலம் உழைத்த சொந்த கட்சியினரை நம்பாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து உதிர்ந்த ரோமங்களை நம்பித்தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறது 'திராவிட முன்னேற்றக் கழகம்'. உதிர்ந்தவைகளில் ஒன்றான மந்திரி ரகுபதி பெயரில் நேற்று ஒரு புலம்பல் அறிக்கை வெளிவந்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் 'புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சட்டப் பேரவையில் ஸ்டாலினின் திமுக ஆட்சியின் தவறுகளை, மோசடி வேலைகளை, கமிஷன், கலக்ஷன், கரப்ஷனுக்காக செய்யும் தகிடுதத்தங்களை கிழித்துத் தொங்கவிட்டார்.
மேலும், நான்கு நாட்களுக்கு முன்பே வெளிவந்த "மக்களின் குரலாய் எடப்பாடியார்" என்ற பெயரிலான மாண்புமிகு அண்ணன் அவர்களின் காணொலிகளைத் தொகுப்பாக நேற்று, யூடியூப் தளத்தில் பதிவிட்டதைக் கண்டும் பதறிப் போய் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கும் இந்த மந்திரியை, மங்குனி என்று தான் அழைக்க வேண்டும்.
"யானை வரும் முன்னே; மணி ஓசை வரும் பின்னே", "பூனை மேல் மதில்" போன்ற புதிய பழமொழி கண்டுபிடிப்பாளர், "பகுத்தாய்வு என்பதற்கு புகுத்தாய்வு, புத்தாய்வு" என்று புதுப் பெயர் சூட்டிய 'உளறல் மன்னன்', 87+8+1 = 107" என்று புதிய கணக்கு சொல்லி, கணித மேதைகளையே ஆட்டம் காணவைத்த 'எண் கணித வித்து)வான்'; நமது நாட்டின் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் மாற்றி உளறிய 'அதி மேதாவி' துண்டுச் சீட்டு புகழ் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் அமைச்சரவையில், தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மந்திரி ரகுபதி ‘வாரிசு துதி பாடுவதும்’ ‘எதிர்க்கட்சித் தலைவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதும்தான்'.
மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் சிறப்பு மண்டலத்திற்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரியாத இந்த மங்குனி தான், நமக்கு வாய்த்த சட்ட அமைச்சர். இந்த விடியா திமுக அரசு செல்லும் நீதிமன்றமெல்லாம் குட்டுமேல் குட்டு வாங்குவது எதனால் என்பது இப்போது தான் புரிகிறது.
மதுரை, மேலூர் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கேட்ட மத்திய, மாநில அரசுகளின் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட கோப்புகளை வெளியிடத் திராணியில்லாமல், சட்டப் பேரவையில், எடப்பாடியாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் பம்மி, திணறி, பதறி அசிங்கப்பட்டதை நாடே பார்த்து கைகொட்டி சிரித்தது.
மத்திய அரசுக்கு, மாநில நீர்வளத் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை; மாறாக சுரங்க ஏலத்தை தமிழக அரசே ஏற்று நடத்தத்தான் அனுமதி கோரப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால், நீர்வளத் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிட்ட பிறகு பேசட்டும்!
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கட்டப்பட்ட பல பாலங்கள் உடைந்தன' என்ற இந்த அதிமேதாவியின் கண்டுபிடிப்பு கடைந்தெடுத்த அயோக்யத்தனம். எங்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மட்டுமல்ல, சாலைகளும் அதன் ஆயுள் காலத்தைத் தாண்டி பாதுகாப்பாக இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இந்த விடியா திமுக ஆட்சியில் திறக்கப்பட்டு, 90 நாட்களில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட தகன மேடை அப்படியே இருக்க, திமுக (ஊழல்) மாடல் பாலத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள்!
மத்திய நீர் ஆணையம் 27.11.2024 அன்றே எச்சரித்த உடன் சாத்தனூர் அணை பகுதியிலும், ஆற்றங்கரையோரமாக உள்ள கிராமப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாத ஆட்சியாளர்கள் நீங்கள். மேலும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, மக்களுடைய கருத்துகளின் அடிப்படையில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். "தங்களுக்கு தகவல் வரவில்லை" என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு காணொலியிலும் சொல்வதை பொய் என்றும், அந்த மக்களை பொய்யர்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வலி அறியாத இந்த தற்குறி அமைச்சர் சொல்கிறாரா?
புயல் என்று வந்தால், புயலைவிட வேகமாக செயல்பட்ட அரசு எடப்பாடியார் அவர்களின் அரசு. புயல் எச்சரிக்கை வந்தது முதல், புயல் கரையைக் கடக்கும்வரை, துறை அமைச்சர் என்ற முறையில் நானும் கட்டுப்பாட்டு அறையிலேயே இருந்து அத்தனை செயல்பாடுகளையும் கவனித்ததுடன், மாவட்ட அமைச்சர்களும், பொறுப்பு அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களுக்காக 24 மணி நேரமும் களத்திலேயே இருந்தார்கள்.
வல்லவராயனை வீழ்த்தப் போவதாக வீரவசனமெல்லாம் பேசிவிட்டு, கதவைத் திறந்ததும் வெள்ளைக் கொடி காட்டி அவன் காலில் விழுந்து மன்றாடுவான் 23-ஆம் புலிகேசி. அங்கு வெள்ளைக் கொடி; இங்கு வெள்ளைக் குடை - அவ்வளவு தான் வித்தியாசம். "வெள்ளைக் குடை ஏந்திய பொம்மை வேந்தரின்" அமைச்சர் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியை மேற்கோள் காட்டியதால் அதே திரைப்படத்தை நானும் மேற்கோள் காட்டுகிறேன்.
மற்றபடி, இவரது தலைவர், வாரிசு, சக அமைச்சர்கள் என ஒவ்வொருவராக டெல்லிக்கு காவடி தூக்குவதை எல்லாம், மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் பாஜக - பாசிச எதிர்ப்பு என்று அவ்வப்போது நாடக வசனம் வேறு!
'திமுக ஆட்சியின் மீது சிறு கீறல்கூட விழவைக்க முடியாதாம்' என்று வெற்று வசனம் பேசியுள்ளார். மாநில அரசின் கடன் சுமார் ரூ. 3.75 லட்சம் கோடி, மின் வாரியம், போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் கடன் பன்மடங்கு அதிகரிப்பு, மருத்துவர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணியாளர் நியமனத்தில் கடும் சுணக்கம், மத்திய அரசு கோரிய நிதியை ஒதுக்கவில்லை என்று ஒரு ஒப்பாரி வைத்துவிட்டு, மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளை முழுமையாக செலவிடாமல் மக்கள் நலனில் அக்கறையற்ற நிர்வாகம், அரசின் 34 துறைகளும் முடங்கிப் போயிருப்பது என ஏற்கெனவே கந்தல் துணி போல் கிழிந்து தொங்கும் இந்த ஆட்சியில் எங்களால் எப்படி கீறல் போட முடியும்?
இந்த 43 மாதகால மக்கள் விரோத ஆட்சியால், தமிழகம் சீரழிந்துபோய் கிடப்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது அடிவருடி அமைச்சர்களை வைத்து நாலாந்தர அறிக்கைகளை விடுகிறார் திரு. ஸ்டாலின். இனியாவது அதிகார மமதையில் வெத்துவேட்டு அறிக்கைகளை வெளியிடாமல், மக்களின் மனநிலையை உணர்ந்து இந்த ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.
ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அகந்தையில் திரியும் கோபாலபுரத்தின் இரண்டாம் புலிகேசியின் கொட்டத்தை மக்கள் துணையோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் அடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.