#FactCheckingUnit || ஐயன் கார்த்திகேயனின் "அரசு பதவிக்கு ஆப்பு" வைத்த அதிமுக தரப்பு.!!
AIADMK filed case against TNgovt Fact checking unit
குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை உருவாக்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்.!!
அதிமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் எதிர்க்கட்சிகளின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பேச்சுரிமையின் மீது அனுமதியற்ற தணிக்கையை விதிக்க காவல் துறையின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி அமர்வு 2020ம் ஆண்டு இழிவான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை ஒடுக்க, மாநிலத்தின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறப்புப் பிரிவுகளை உருவாக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டதை தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார் சி.டி.ஆர் நிர்மல் குமார்.
அதேபோன்று சென்னை நீதிபதிக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த ஏ.மருதாச்சலம் (59) என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரணை செய்த போதே காவல் துறைக்கு இதே போன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு அக்டோபர் 11, 2023 அன்று தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் அவதூறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களில் சமூக ஊடக பிரிவை உருவாக்கியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்டு கடந்த 2020ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல மனுவை முடித்து வைத்தனர்.
மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2020ன் கீழ் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை அமைப்பதற்கான மத்திய அரசின் முன்மொழிவை மேற்கோள் காட்டியுள்ள சி.டி.ஆர் நிர்மல் குமார், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் முன்வைக்கப்பட்ட வாதத்தை அடுத்து உண்மை சரிபார்ப்பு பிரிவு அமைக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.
காவல் துறையின் கட்டமைப்பிற்குப் புறம்பாக, தமிழக அரசு உண்மை சரி பார்க்கும் பிரிவை எவ்வாறு அமைக்க முடியும்?, மேலும் ஆளுங்கட்சி திமுகவின் ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனை உன்னை சரி பார்த்து பிரிவின் இயக்குநராக நியமித்துள்ளனர். உண்மை சரிபார்க்கும் பிரிவு அமைப்பதற்காக அக்டோபர் 6, 2023 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணை அரசியல் சட்டத்திற்கு முரணானதாக அறிவிக்க வேண்டும் என சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கூடிய விரைவில் விசாரணைக்காக பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட எந்த விதமான அரசு நடைமுறையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
AIADMK filed case against TNgovt Fact checking unit