திமுகவுக்கு அடுத்த நெருக்கடி! பொன்முடி ஊழல் வழக்கில் ஜெயக்குமார் மனு தாக்கல்!
AIADMK Jayakumar filed a new petition in Minister Ponmudi case
உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த 2006-2011 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட 8 பேர் மீது விழுப்புரம் காவல்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் முக்கிய சாட்சிகளாக இருந்த 7 பேரும் பிறழ் சாட்சியம் அளித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்தார். இவ்வாறு அடுத்தடுத்து அரசு அதிகாரிகளே பிறழ் சாட்சியம் அளித்து வருவது திமுகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி ஊழல் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால் உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது எதிர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிடுமா? என்பது அடுத்த விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK Jayakumar filed a new petition in Minister Ponmudi case