பாஜகவின் இளைஞரணி தலைவர் வெட்டி படுகொலை!
Puducherry BJP Leader murder
புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல சரித்திர குற்றவாளி உமாசங்கர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் லாஸ்பேட்டை மற்றும் கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ளன.
பாஜகவின் முன்னாள் இளைஞரணி தலைவர் ஆன இவர், தற்போது எம்.எல்.ஏ ஜான்குமாரின் நெருங்கிய ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின், 2026 தேர்தலுக்காக புதுச்சேரியில் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகளை உமாசங்கர் மேற்கொண்டிருந்தார்.
நேற்று இரவு, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்த பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த உமாசங்கர் மீது ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. தப்பியோட முயன்ற அவரை சுற்றி வளைத்து அரிவாள்களால் தாக்கியதில், அவரது கை துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து தலையும் முகமும் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
உமாசங்கரின் இறப்பைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் சார்லஸ் மார்ட்டின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
English Summary
Puducherry BJP Leader murder