தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு பட்டா! வருமான வரம்பு ரூ.5 லட்சம் - தமிழக அரசு அதிரடி அரசாணை!
TNGOvt order land people
தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு எதிர்வரும் 6 மாதங்களில் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் செயல்முறை, வருமான வரம்பு உள்ளிட்ட விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 17ல் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த மாற்றங்கள் உறுதி செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்திருப்பவர்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் வரை உள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு நில உரிமை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய விதிமுறைகளில் வருமான வரம்பு குறைவாக இருந்த நிலையில், இப்போது ரூ.5 லட்சம் வரை உயர்த்தி உள்ளது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய சீரமைப்புகளின்படி, தகுதி பெற்ற குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 3 சென்ட் வரை நிலத்திற்கு பட்டா வழங்கப்படும்.
இதன் மூலம் நீண்ட காலமாக நில உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு உரிமை கிடைத்து, அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என அரசு எதிர்பார்க்கிறது.