வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது - அண்ணாமலை, டிடிவி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. 

சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார். 

மாநில அரசின் முழுமுதற் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று  பேர் படுகொலை - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக காவல்துறையை கொண்டிருப்பதாக பெருமை பேசும் முதலமைச்சர், அந்த காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்துவதே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முக்கிய காரணம். 
 
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மூவரை கொலை செய்யும் அளவிற்கான அசாதாரண  சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

உலக அளவில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையை கொண்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பெருமை பேசி முடித்த இரு தினங்களுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் இந்த கொலைச் சம்பவங்கள் முதல்வரின் தலைமையில் இயங்கும் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்து ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

எனவே, இந்த படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துவதை தவிர்த்து சட்டம் ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV BJP Annamalai DMK MK stalin Tiruppur incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->