ஊர் ஊராக பெருமை பேசி நாடகம் நடத்தும் CM ஸ்டாலின்! சொன்னது எல்லாம் என்ன ஆச்சு? டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


ஊர் ஊராக சென்று தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும், உருவான வேலைவாய்ப்புகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தயாரா? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கள ஆய்வு எனும் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில் பேசும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பத்துலட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையானது.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடங்கி சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்தாரே தவிர, அந்த பயணத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் இன்று வரை வந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், ஊர் ஊராக சென்று ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் பெருமை பேசி நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பதோடு, இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை முடக்கியும், பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வரிகளையும், கட்டணங்களையும் பன்மடங்கு உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவுக்கு எதிராக சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் எதிர்கால இளைய சமுதாயம், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகை போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் விலை மதிப்பில்லாத எதிர்காலத்தை தொலைத்து வருவதாகவும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

எனவே, இனியும் வாக்கு அரசியலுக்காக மக்களை ஏமாற்றாமல், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவதோடு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்" என முதல்வர் ஸ்டாலினை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran to DMK MK stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->