மக்களை ஏமாற்றி திமுக தீர்மானம் கொண்டுவந்துள்ளது - தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கு.!
tamilisai soundarrajan speech about dmk working committee meeting resolution
இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் மக்களை ஏமாற்றி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
"இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் திமுக பல தீர்மானங்களை நிறைவே(ஏமா)ற்றி இருக்கிறது. கேரளாவிற்கு வைக்கம் நிகழ்ச்சிக்கு போனதை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள் அதே கேரளாவில் இருந்து தமிழக மக்களை பாதிக்கும் மருத்துவ கழிவுகளை கொட்டியதை கண்டுகொள்ளாமல் இருந்ததை மக்கள் தீர்மானமாக எதிர்த்திருக்கிறார்கள்.
மழைக்கு தயாராகும் அடிப்படைக் கட்டமைப்புகளை சரி செய்யாமல் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி கொண்டிருப்பதை மக்கள் தீர்மானமாக அறிந்திருக்கிறார்கள். இதற்கு அங்கங்கே நடக்கும் மக்கள் போராட்டங்களே சாட்சி.
டங்க்ஸ்டன் தொழிற்சாலை குறித்து 10 மாதம் சும்மா இருந்துவிட்டு மக்களின் போராட்டம் பத்தி எரியும் போது தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதை மக்கள் தீர்மானமாகவே உணர்ந்திருக்கிறார்கள்
புதிய கல்விக் கொள்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அதை ஏற்காமல் அந்த திட்டத்திற்கு வேண்டிய நிதி மட்டும் தரவில்லை என்று மத்திய அரசை குறை கூறுவதை இளைய சமுதாயம் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளாது.
கைவினை கலைஞர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் 8 லட்சத்திற்கும் மேலானவர்கள் பதிவு செய்திருந்தும் மத்திய அரசு அவர்களுக்கு உதவ தயாராக இருந்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கியதை மக்கள் தீர்மானமாக உணர்ந்து இருக்கிறார்கள்.
2 ஆண்டுகளாகியும் வேங்கை வயலைச் சார்ந்த பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்காமல் தங்களை சமூக நீதி காவலர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று மக்கள் தீர்மானமாகவே உணர்ந்து இருக்கிறார்கள்.
மழை வெள்ள காலங்களிலும் சரி; மற்ற நேரங்களிலும் சரி; மக்களைக் காக்காத திமுக அரசு 200 என்று இறுமாப்புடன் பேசி மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள். விடியலை தருகிறோம் என்ற அவர்களுக்கு ஆட்சியில் இருந்து விடுதலை தருவார்கள்... விடியலை தராமல் விளம்பரம் மட்டுமே நடக்கிறது என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்" என்றுத் தெரித்தார்.
English Summary
tamilisai soundarrajan speech about dmk working committee meeting resolution