பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் அதிமுக.. சுடச்சுட பதில் கொடுத்த அண்ணாமலை.!!
Annamalai response to AIADMK opposition to union civil code
மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதே நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருந்து வருகிறோம். சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக் கூடாது என்று அதிமுக வலியுறுத்துகிறது" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அதிமுக பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "போபாலின் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டம் குறித்து தெளிவாக கூறியிருந்தார்.
ஒரு வீட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதில் சில கட்சிகளின் நிலைப்பாட்டில் வித்தியாசம் இருக்கலாம். தவறு கிடையாது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. அதிமுக இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது, பாஜக மூன்று மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. வேற்றுமை எல்லா இடத்திலும் உள்ளது. வரும் காலங்களில் பொது சிவில் சட்டத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பி சுஷில்குமார் அவர்கள் தலைமையில் உள்ள கமிட்டி பொது சிவில் சட்ட வரைவு அறிக்கையை கொண்டு வரும்போது புரியும்.
பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம், இது யாரையும் பிரிப்பதற்கான சட்டம் இல்லை. டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பல சட்டங்களை கொண்டு ஒற்றுமையான ஒரு நாட்டை உருவாக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கான காலச்சூழல் 1950 ஆம் ஆண்டு இல்லை. எனவே பொது சிவில் சட்டத்தின் வரைவு அறிக்கை கொண்டு வரும் பொழுது இது அனைவருக்கும் புரியும்.
இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் அது நல்ல சட்டம். யாருக்கும் எதிரான சட்டமாக பொது சிவில் சட்டம் இருக்காது. எதிர்வரும் காலங்களில் அவர்களின் நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். பொது சிவில் சட்டம் குறித்து அனைவரும் புரிந்து கொண்டு பாஜகவின் கூட்டணி கட்சிகள் அல்லாது மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்" என பதில் அளித்துள்ளார்.
English Summary
Annamalai response to AIADMK opposition to union civil code