அவர்கள் "பகையாளிகள்" தான் "பங்காளிகள்" இல்லை.. அண்ணாமலையின் அதிரடி..!!
Annamalai said Corrupt people are enemies for BJP
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அனைவரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இத்தகைய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது வரை அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக பாஜக தலைமை கூறிவரும் நிலையில் அண்ணாமலை இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பது அரசியல் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி சொத்து பட்டியல் வெளியிடப்படும் என கூறுவது அண்ணாமலை என்ற தனிநபரின் முடிவா.? அல்லது பாஜக என்ற கட்சியின் முடிவா..? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை "மக்கள் வரிப்பணத்தில் யார் ஆட்சியில் இருந்தார்களோ எங்களை பொறுத்தவரை யார் ஊழல் செய்தார்களோ அவர்களுடைய பட்டியலை வெளியிடுவதே நியாயம்.
ஊழல் விவகாரத்தில் நண்பர்கள் எதிரிகள் என்று எல்லாம் நான் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பங்காளிகள் என்றும் கூறவில்லை, எல்லாருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பாஜக பகையாளியாக தான் பார்க்குமே தவிர பங்காளியாக பார்க்காது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு கே.பி முனுசாமி திமுகவை பங்காளி என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Annamalai said Corrupt people are enemies for BJP