அந்தியூர் செல்வராஜை கீழே அமரவைத்த ஸ்டாலின், டெல்லி வரை புகார் சென்றதால், படபடப்பில் திமுக வெளியிட்ட அறிக்கை!
Anthiyur selvaraj given explanation about stage seat issue
"பொய் பிரச்சாரங்கள் - பொய் புகார்கள் மூலம் திமுகவிற்கு எதிராக அருந்ததியின மக்களை திருப்பலாம் என தூய்மை பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசனும், பாஜகவும், தினமலரும் கனவு காண வேண்டாம்" என திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் MP தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் பங்கேற்று வரும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அமோக ஆதரவைப் பார்த்து “தினமலருக்கு” எரிச்சல்! ஆகவே, அந்த நிகழ்ச்சியில் என்னைத் தனியாக நிற்க வைத்து விட்டனர் என்று ஏதோ அருந்ததியினர் மக்கள் மீது அக்கறை இருப்பது போல் வேடமிடுகிறது. அய்யோ பாவம்! தினமலர் பத்திரிகை இட்டுக் கட்டிய - ஒரு கற்பனையை வெளியிட்டு – அப்பத்திரிகைக்கு வேண்டியவர்களை மனம் குளிர வைத்துள்ளது!
![](https://img.seithipunal.com/media/dgesargyerc.jpg)
அருந்ததியினர் சமுதாய உணர்வுகளைக் கூட மதிக்கத் தெரியாத, சமூகநீதிக்கு எதிரான - தினமலர் பத்திரிகை இப்படிச் செய்தி வெளியிடுவது வாடிக்கை! அதை “தலையில் தூக்கி வைத்துக் கொண்டு”- திரு. வெங்கடேசன் அரசியல் ஆதாயத்திற்காக “ஆடுவதுதான்” வியப்பாக இருக்கிறது. தனது பதவியை பா.ஜ.க.விற்கு தேர்தல் லாபத்திற்கு பயன்படுத்த ஒரு புகாரைத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி - எங்கள் கழகத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுவது அவர் வகிக்கும் பதவிக்குத் துளியும் அழகல்ல!
அருந்ததியின மக்களுக்கு அந்தப் பதவியை வைத்து ஏதாவது மத்திய அரசின் துறைகளில் - பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தால் - அல்லது அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடங்களைப் பெற்றுக் கொடுத்தால் அவர் வகிக்கும் பொறுப்புக்கு நல்லது! இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வை அழைத்து வர முடியும் என்றால் அது அவர் செய்த சாதனையாக இருக்கும். ஆக்கபூர்வமான அந்த செயல்பாடுகளை விடுத்து அருந்ததியினர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கி - எங்களின் சமூக கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் தி.மு.க.வை கொச்சைப்படுத்த திரு. வெங்கடேசன் நினைத்தால் அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
![](https://img.seithipunal.com/media/ae4ttyedggae.jpg)
அமைச்சரவையில் எனக்கு இடமளித்து அருந்ததியினர் குறைகளைத் தீர்க்கும் அதிகாரத்தை அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அருந்ததியினர் குரல் அகில இந்தியாவிற்கும் கேட்க வேண்டும் என்று மாநிலங்களவைக்கு என்னை அனுப்பியவர் எங்கள் கழகத் தலைவர் அவர்கள். சமத்துவபுரம் கண்டு - அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அனைவருடனும் வாழ வைக்கும் சமூக நல்லிணக்க - சமத்துவத் தோட்டத்தை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆகவே அருந்ததியின மக்களை - அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை இப்படிப் பொய் பிரச்சாரங்கள் மூலம் - பொய் புகார்கள் மூலம் தி.மு.க.விற்கு எதிராகத் திருப்பி விடலாம் என்று திரு. வெங்கடேசன் மட்டுமல்ல - அவரை இயக்கும் பா.ஜ.க.வோ – அல்லது முரசொலி மூலப்பத்திரம் கேட்டு மூக்கறுபட்டு நிற்பவரோ - ஏன் “தினமலர்” பத்திரிகையோ கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். உங்களின் நிறம் எங்கள் மக்களுக்குத் தெரியும். ஆகவே அருந்ததியின மக்களை வைத்து தி.மு.க.விற்கு எதிராக அரசியல் செய்வதைத் திரு. வெங்கடேசன் போன்றவர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Anthiyur selvaraj given explanation about stage seat issue