30 நாட்களாக நடந்த தமிழக சட்டசபை கூட்டம் நிறைவில்,18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்..!
At the end of the 30 day Tamil Nadu Legislative Assembly session 18 bills were passed
கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (15-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது. தொடர்ந்து,மார்ச் 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. இதற்கிடையில் வந்த வார விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.
அத்துடன், கூட்டம் நடைபெற்ற ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 2, 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இதுவரை மொத்தம் 55 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுள்ளது. நிறைவாக, நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியககோரிக்கை விவாதம் நடந்தது. குறிப்பாக, இந்த விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவரது குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் பதில் அளித்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரை இடம்பெற்றது. அப்போது, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் பின்னர், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஒன்றரை மாத காலத்தில் 30 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெற்றுள்ளது.தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அக்டோபர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் சுமார் 03 முதல் 05 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் அத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
At the end of the 30 day Tamil Nadu Legislative Assembly session 18 bills were passed