மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தா மட்டும் போதுமா... CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் காட்டும் அக்கறையை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் காட்டவேண்டும். ஆட்சிக்கு வந்ததும், 3 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் தமிழக இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளைக் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசுப் பணிக்காக, பல ஆண்டுகள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்ட இளைஞர்களைத் திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
தமிழக அரசுப் பணி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை முறையாக நடத்தாமலும், தேர்வு முடிவுகளைக் குறித்த நேரத்தில் வெளியிடாமலும் இளைஞர்களை அல்லலுக்குள்ளாக்குவது மட்டும்தான் தொடர்கிறதே தவிர, இன்று வரை, அதற்கான தீர்வை நோக்கி எந்த உறுதியான திட்டங்களும் திமுக அரசிடம் இல்லை.
கடந்த 15.11.2022 அன்று, பேராசிரியர்/மருத்துவ உதவிப் உளவியல் நிபுணர் (Assistant Professor cum Clinical Psychologist) பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, தகுதியான இளைஞர்கள் விண்ணப்பித்து, கடந்த 14.03.2023 அன்று, எழுத்துத் தேர்வு நடைபெற்றது. பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 15.09.2023 அன்று, நேர்முகத் தேர்வு நடந்தது.
தேர்ச்சி பெற்றோர் பட்டியல், கடந்த 10.10.2023 அன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போது ஓராண்டுக்கும் மேல் கடந்தும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை இன்னும் வழங்கப்படவில்லை.
தங்கள் அரசுப் பணி நிலைமை என்னவென்று தெரியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். அரசுப் பணிக்கான தேர்வு என்றாலே, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என, தமிழகத்தில் காலதாமதம் என்பது இயல்பாகி விட்டது.
அரசுப் பணி காலியிடங்களை உடனடியாக நிரப்ப நிரப்ப வேண்டும் என்பதில், ஆள்பவர்களுக்கு அக்கறை இல்லை. தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதிலும், துணை முதலமைச்சராக்குவதிலும் இருக்கும் வேகத்தை, அரசுப் பணி காலியிடங்களை, தகுதியுள்ள தமிழக இளைஞர்களுக்கு வழங்குவதில் காட்டுவதில்லை.
பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, தகுதிச் சான்றிதழ்களை ஒப்படைத்தும், ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பணி நியமனம் வழங்கவில்லை என்ற காலதாமதத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழகம் முழுவதுமே, அரசுத் துறைகளில் குறித்த நேரத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. குறிப்பாக, மருத்துவத் துறையில், போதுமான அளவு மருத்துவர்களோ, ஊழியர்களோ இல்லையென்றால், அது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் என்பது கூடத் தெரியாமலா இருக்கிறது திமுக அரசு?
நேற்றைய தினம், அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லாததால், செவிலியர்களும், உதவியாளர்களும் பிரசவம் பார்த்து, ஒரு குழந்தையின் உயிர் பறிபோயிருக்கிறது. இதே போன்று, தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையின் தவறால் பலியான உயிர்கள் ஏராளம். அரசின் அஜாக்கிரதையாலும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படுத்தும் காலதாமதத்தாலும், ஏற்படும் உயிரிழப்புகளுக்கு திமுக அரசே முழு பொறுப்பு.
உடனடியாக, உதவிப் பேராசிரியர்/மருத்துவ உளவியல் நிபுணர் (Assistant Professor cum Clinical Psychologist) 600 நியமனத்தை மேற்கொள்ள வேண்டும், தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகள் மற்றும் நியமன காலத்தை, தேர்வு தேதி அறிவிக்கும்போதே வெளியிட வேண்டும்" என்று தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin