திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் - அண்ணாமலை!
BJP Annamalai Condemn to DMK Mk Stalin Govt
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.
திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Mk Stalin Govt