ஜஸ்ட் டெல்லிங்.. நிர்வாக வசதிக்காக "புதிய மாநிலங்கள்" உருவாகலாம்..!!
BJP executive said new states may be creates for admin convenience
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின் பொழுது ஆரணியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார். அதேபோன்று கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என திருவிடைமருதூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த புதிய 8 மாவட்டங்களில் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலை ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.
இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சரின் இத்தகைய பதிலை தமிழக பாஜக நிர்வாகி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருக்கும் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்!
தவறில்லை! நிர்வாக வசதிக்காக மாநில அரசு புதிய மாவட்டங்களை உருவாக்குவது போன்றது தான், நிர்வாக வசதிக்காக மத்திய அரசு புதிய மாநிலங்களை உருவாக்கியதும், உருவாக்குவதும். #just_telling" என பதிவிட்டுள்ளார். நிர்வாக வசதிக்காக மத்திய அரசு மாநிலங்களை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட அதிகாரம் உள்ளதை சுட்டிக் காட்டும் வகையில் பாஜக நிர்வாகி பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதியில் இத்தகைய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையதளவாசிகள் நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பதிவில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
BJP executive said new states may be creates for admin convenience