தர்மபுரி சம்பவம்: திமுக எக்காலத்திலும் திருந்துவதற்கும் வாய்ப்பு இல்லை - பட்டியல் போட்டு வெளுத்து வாங்கிய எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


பாஜக ஒருமுனைப்பு குழு தலைவர் எச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2018 ஆம் ஆண்டு தர்மபுரியில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மனிதம் வக்கிரமடைந்து வருவது பெரும் வேதனை. இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என அறிக்கை வெளியிட்டார். 

2020 ஆம் ஆண்டு சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்த போது இந்தக் கொடுமை கண்டு மனம் பதறுகிறது.

இது சட்டங்கள் - சமூகத்தின் தோல்வி. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். 

திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து ரகசிய பிரிவும் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சியில் சென்னை அயனாவரத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி 10 க்கும் மேற்பட்ட கயவர்களால் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்ட கொடுந்துயர சம்பவம் நிகழ்ந்து வந்தது அந்த மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்து அவர்கள் தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்தபோது காவல்துறை குற்றம் இழைத்தவர்களை அழைத்து விசாரித்து அவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அந்த மாணவியின் நிலையையும், அவருடைய பெற்றோரின் நிலையையும் எண்ணிக் கண்கலங்கி அவ்விஷயத்தை பொதுவெளிக்குக் கொண்டு வந்த பிறகு தமிழகத்திலுள்ள எதிர்கட்சித் தலைவர்கள், சமூக பொறுப்பு மிக்கவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த உடன் விஷயம் வீரியம் கொண்டு எழ செய்வதறியாது திகைத்த திமுக அரசு வேறு வழியின்றி குற்றவாளிகளில் இருவரை மட்டுமே கைது செய்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் திமுகவை சேர்ந்த ஞானசேகரன் என்கிற கயவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவர் காவல்துறையிடம் புகார் அளித்த உடனேயே புகார் கூறிய மாணவியின் முழு விபரங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அந்த மாணவிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை. 

எதிர்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் இருந்து பெரும் எதிர்ப்பும், கடுமையான கண்டனக் குரல்களும், தமிழக பாஜகவின் போராட்டமும் தீவிரமடைந்த பின்னரே நடவடிக்கையில் இறங்கி குற்றவாளி ஞானசேகரனை கைது செய்துள்ளது. ஆனாலும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான அவனோடு தொடர்புடையவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் வழக்கை மூடி மறைக்க முயல்கிறது திமுக அரசு. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் மருத்துவமனை செவிலியர் ஒருவரை நிர்வாணமாக படமெடுத்து அவரிடம் ரூ.10/ லட்சம் பணம் கேட்டு மிரட்டி வரும் புதுக்கோட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி இணை அமைப்பாளர் பாரதிராஜா மீது பாதிக்கப்பட்ட செவிலியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து 15 நாட்கள் கடந்தும் குற்றவாளி பாரதிராஜா திமுக அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் தீவிர ஆதரவாளர் என்கிற ஒரே காரணத்தால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறது காவல்துறை. பாதிக்கப்பட்ட பெண் நீதி கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் வேதனை அளிக்கிறது. 

திமுக எதிர்கட்சியாக இருந்த போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்போம் என திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தார் ஆனால் இன்று வரையிலும் அவர் அதை நிறைவேற்றவில்லை. 

ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினராக இருப்பதால் அவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. தொடர்ந்து காலதாமதம் செய்கிறது ஏனெனில் தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை இயங்குவதால் தான் இந்த நிலை. 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க ரகசிய பிரிவு உருவாக்கப்படும் என முக ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார் ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் அவருடைய முழு விபரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்து வெளியிட்டது காவல்துறை. தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காவல்துறையே ரகசியம் காக்க தவறிவிட்டது. 

திமுக இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றியதாக வரலாறு இல்லை.
பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபநிலை கண்டு தமிழக முதல்வர் வருந்துவதற்கும் வாய்ப்பு இல்லை! 
திமுக எக்காலத்திலும் திருந்துவதற்கும் வாய்ப்பு இல்லை" என்று எச்.ராஜ தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja Condemn to DMK Govt MK STalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->