திமுக அரசு அண்ணாமலைக்கு எந்த பாதகமும் செய்யவில்லை - அமைச்சர் ரகுபதி.!
minister ragupathy speech about annamalai sattai slape
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளார்.
அண்ணாமலையின் சாட்டை அடிக்கு திமுக அமைச்சர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"சாட்டையால் அடித்து கொள்வது என்பது ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம். அதனால், அண்ணாமலை தான் செய்த தவறுகளுக்காக பாவ விமோசனத்திற்காக சாட்டையால் அடித்து கொண்டாரா? அல்லது அவர் ஏதேனும் ஒரு தவறு செய்ததற்காக தனக்கு தானே தண்டனை விதித்துக்கொண்டு சாட்டையால் அடித்து கொண்டாரா? என்பது தான் கேள்வி.
திராவிட மாடல் அரசு அவருக்கு எந்தவிதமான பாதகமும் செய்யவில்லை. திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணிகள் அணியமாட்டேன் என அண்ணாமலை கூறியதை பற்றி கேட்கிறீர்கள். அப்படி என்றால் அவர் வாழ்நாள் முழுவதும் காலணிகள் அணிய முடியாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போட்டோ எடுத்து கொண்டதை வைத்து கூற முடியாது. ஏதேனும் ஒரு தொடர்பை நிரூபியுங்கள், ஏற்றுக்கொள்கிறோம். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞானசேகரன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம் அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட வழக்கு. இது அரசாங்கத்தால் மறைக்கப்படாத வழக்கு. பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister ragupathy speech about annamalai sattai slape