என்ன தகுதி இருக்கிறது? திமுக அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்.!
bjp member complaint against ptr
மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லெட்சுமணன் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரின் உடல் இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தில் வைத்தே லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பாஜகவினருக்கும், திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அமைச்சர் கார் மீது பெண் ஒருவர் காலணியை வீசினார். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், "மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார்.
மேலும், அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார் விமான நிலையத்துக்குள் விட்டது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர், அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவது போல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், போலீஸாரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பாஜகவினர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bjp member complaint against ptr