நீங்க தமிழ் இனமா, திராவிட இனமா? ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும் - பாஜக எம்எல்ஏ கேள்வி! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும் எம்எல்ஏவும் ஆன வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி பொன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ஒரு வரி விடுப்பட்டதை வைத்து, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர்.

சென்னை தொலைக்காட்சி பொன் விழாவில் ஆளுநர் ஒரு விருந்தினராக மட்டுமே பங்கேற்றார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினரின் கவனக்குறைவுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும்? கவனக்குறைவால் நேர்ந்த தவறுக்கு சென்னை தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆனால், இதற்கு 'ஆளுநரா? ஆரியரா?' என கேள்வி எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்கு ஆளுநர் வேதனையுடன் பதிலளிக்க, அதற்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!" என கூறியிருக்கிறார்.

தமிழில் பெயர் வைக்காமல் ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துள்ள முதலமைச்சர், தமிழ் எங்கள் உயிர் மூச்சு எனக்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. திராவிடம், திராவிட மாடல், திராவிட இனம் எனக்கூறி தமிழ், தமிழர் அடையாளத்தை திமுக அழித்து வருகிறது. இப்போது ஆளுநருக்கு பதிலளிக்கும்போது, ஒரு இடத்தில் தமிழ் எங்கள் இனம் என்கிறார். மற்றொரு இடத்தில் திராவிட இனம் என்கிரார். தமிழ் இனமா, திராவிட இனமா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்.

டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மேம்பாக்காக பார்த்தால் இந்த வாதம் சரி என்பது போல தோன்றும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அந்த மொழிகள் பேசும் மக்கள் கொண்ட மாநிலங்கள் உள்ளன. ஆனால், சமஸ்கிருத மொழியை பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் இல்லை. மாநில அரசும் இல்லை. அதனால், பழமையான அந்த மொழியை அழியாமல் காக்க மத்திய அரசு மத்தியப் பல்கலைகளை அமைத்து நிதி ஒதுக்கியுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து மக்களின் மொழி உணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முதலமைச்சர் முயற்சிக்கிறார்.

"உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, திருக்குறளை தேசிய நூலாக்க யார் தடையாக இருந்தார்கள்? என்தற்கு முதலமைச்சர் முதலில் பதில் சொல்ல வேண்டும்.

சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கிறது என்பதற்காக, தீபாவளி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல், இந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழும் முதலமைச்சர் ஸ்டாலின், வகுப்புவாதம், பிளவுவாதம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது.

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தாக்குப் பிடிக்கவில்லை. மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய முடியவில்லை. வட சென்னை பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மிகவும் அத்தியாவசியமான வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சென்னை மாநகரிலேயே ஒரு பகுதியை புறக்கணிப்பவர்கள், மத்திய அரசு புறக்கணிக்கிறது எனது வெட்கமின்றி பேசுகிறார்கள்.

இனியாவது மொழி அரசியல், வெறுப்பு அரசியலை கைவிட்டு மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சியை நடத்துங்கள். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதுபோல, இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லுங்கள். அனைத்து மதத்தினரையும் சமமாக மதியுங்கள். திராவிடம், திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி தமிழ், தமிழர்களின் அடையாளத்தை அழிக்காதீர். இது தகவல் தொழில்நுட்ப யுகம். வெறும் உணர்ச்சி அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. உண்மை தான் வெல்லும். இதை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA vanathi Srinivasan condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->