டெல்லி வெற்றியை தொடர்ந்து, உத்தரப் பிரதேசம் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதா..!
BJP wins Uttar Pradesh byelections
டெல்லியை தொடர்ந்து உத்தரபிரதேசம் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 61 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பா.ஜ.க., வெற்றி பெற்றது.
உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது பகுதி இது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். ஆனால், அவர் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், பைசாபாத் தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கும் சமாஜ்வாதிக்கும் கடும் போட்டி நிலவியது. சமாஜ்வாதி சார்பில், எம்.பி., அவதேஷ் பிரசாத்தின் மகன் அஜித் பிரசாத், பா.ஜ.க., சார்பில் சந்திரபானு பஸ்வான் போட்டியிட்டனர். மொத்தம் 64.02 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல், வாக்குகள் எண்ணப்பட்டது.
மொத்தம் 30 சுற்றுகளாக எண்ணப்பட்ட இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 1,46,397 வாக்குகளை பெற்று வென்றார். சமாஜ்வாதி வேட்பாளர் 84,687 வாக்குகளை பெற்றார். இதன்மூலம், 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க., வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றி குறித்து உ.பி., துணை முதல்வர் கேஷவ் பிரசாத் கூறுகையில், 'இது வெறும் டிரெய்லர் தான். 2027-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்த படத்தையும் காட்டுவோம். அப்போது, சமாஜ்வாதி என்ற கட்சியே இருக்காது,' எனக் கூறியுள்ளார்.
அத்துடன், லோக்சபா தேர்தலில் பைசாபாத் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜ.க., கட்சியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP wins Uttar Pradesh byelections