தெலுங்கானா தேர்தல் - வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள்!!
BRS party released promises for telangana assembly election
தெலுங்கானா தேர்தல் - வாக்குறுதிகளை வாரி வழங்கும் பாரத ராஷ்டிர சமிதி.!
தெலுங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி, நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையை கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
* தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.
* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.
* 'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.
* இதுவரைக்கும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக உயர்த்தப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* தற்போது வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு, ஒரு வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும். தங்கிப்படிக்கும் ஜூனியர் கல்லூரிகள், பட்டப்படிப்பு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.
நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத 90 சதவீத நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தனிநபர் வருமானம் மற்றும் மின்சார பயன்பாட்டில் முதன்மை மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்துள்ளது" என்று பேசியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தெலுங்கனா மாநில தேர்தலிலும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
English Summary
BRS party released promises for telangana assembly election