சென்னையில் முதியவர் தீக்குளிப்பு., அரசு அதிகாரிகள் வாகனம் மீது தாக்குதல்., பதற்றம்., போலீஸ் குவிப்பு.!
chennai kobalsamipuram old man attempt suicide
சென்னை ஆர் ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் அவர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அந்த பகுதிகளை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 60 வயதான கண்ணையா என்ற நபர், அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பரவியதால், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதியவர் தீக்குளித்த காரணத்தால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், போலீசார் வாகனம் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
chennai kobalsamipuram old man attempt suicide