பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை உருவெடுத்துள்ள நிலையில், நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (ஏப்.22) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதென்றும், தமிழகத்தின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே உள்ளது என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைகால மின் தேவையைப் பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்று தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைப் பொறுத்தவரை, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன என்றும், இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரயில்வேயால் வழங்கப்படுகின்றன என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும், இது கரோனா பெருந்தொற்றிற்குப் பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, இந்த நிலை உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter to pm modi for power cut issue april


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->