நாட்டிற்கு இதுவா முக்கியம்?...நயன்தாரா-தனுஷ் சண்டை தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை!...காயத்ரி ரகுராம் கடும் தாக்கு!
Is this important for the country nayanthara dhanush fight is dmk diversionary work gayatri raghuram hits hard
மதுரையில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகையும், அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சமூக நீதி, சமூக நீதி என்று கூறும் தி.மு.க. சிறுபான்மையினருக்கு என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனுஷ்-நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில் செல்வதாக தெரிவித்த அவர், அதுவா நாட்டிற்கு முக்கியம் என்றும், நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன, திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், தனுஷ் உடன் சண்டை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய காயத்ரி, இது தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது என்றும், விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளதாகவும், மக்களுக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை என்று விமர்சித்து பேசினார்.
English Summary
Is this important for the country nayanthara dhanush fight is dmk diversionary work gayatri raghuram hits hard