கூட்டணி கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டும், திமுக தலைமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.!
Communist party of India Marxist
கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலனடைந்ததையும் பார்த்தோம்.
இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காக மறைமுக தேர்தல்கள் நடந்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பேசி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த உடன்பாடு பெரும்பாலும் அமலாகவில்லை.
திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர் கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும். பதவி வெறியில்
சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Communist party of India Marxist