செல்வப் பெருந்தகையின் பதவி பறிபோகிறதா... சொந்த கட்சியினரே டெல்லிக்கு ரிப்போர்ட்!
Congress Selvaperunthagai BSP Armstrong
கடந்த ஜூலை மாதம், 5ஆம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்தில் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மற்றும் மாநில தலைவர்கள், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் ரவுடிகள், நிர்வாகிகள் என மொத்தம் 28 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே சமயத்தில் இந்த இந்த கொலை வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கொலையாளியை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்ற தகவலம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் கட்டுரையாக வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகைக்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக கூறி, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்திக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதம் எழுதப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள், இது குறித்து விசாரணை செய்து காங்கிரஸின் தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து செல்வப் பெருந்தகை மாற்றப்படலாம் என்ற ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், எம்பிக்கள் சிலரும் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு செல்வபெருந்தகையை மாற்றுவது குறித்து பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தன் மீது அவதூறு பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, செல்வப் பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செல்வப் பெருந்தகை முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
English Summary
Congress Selvaperunthagai BSP Armstrong