திமுகவால் தான் எங்கள் கட்சிக்கு வெளிச்சமா? - பெ. சண்முகம் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் நாடு மாநில 24 வது மாநாட்டில் தோழர் பெ. சண்முகம் அவர்கள் மாநிலச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பெ. சண்முகம் தெரிவிக்கையில், "மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம். போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. 

பல நேரங்களில் தி.மு.க.வின் எதிர் கூட்டணியில் இருந்திருக்கிறோம். இவர்களால் தான் எங்கள் கட்சிக்கு வெளிச்சம் என்பது ரொம்ப அதீதமான வார்த்தை" என்று தெரிவித்தார்.


இதற்கிடையே, தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ''தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். 

சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். நவீன தாராளமய பொருளாதார பாதை உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரிசெய்வதற்கான வல்லமை இடது மாற்றுகே உண்டு.

இடது ஜனநாயக மாற்று மட்டுமே தமிழக மக்களுக்கான உண்மையான விடியலாக அமைந்திடும். இந்த வரலாற்று மாற்றத்தை சாதிக்க ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள், அனைத்துத்தரப்பு உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் மனிதநேய சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறையினர் என அனைவரும் முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

ஒன்றிய அரசு பின்பற்றி வந்த கொள்கைகள் தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வந்துள்ளன. அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசின் மக்களுக்கு விரோதமான கொள்கைகள் தமிழகத்திலும் அமலாக்கப்பட்டு வந்துள்ளன. அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கி வருகிற பாதையில் தான் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் பயணித்து வந்துள்ளன

தமிழக வரலாற்றில் மக்களிடையே அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்துள்ள திராவிட இயக்கம் மற்றும் அதன் கட்சிகள் சமூக தளத்தில் சீர்திருத்தங்களையும் சில முன்னேற்றங்களையும் சாதித்துள்ளது உண்மையே எனினும், பிரதேச முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாத்து வந்துள்ள இந்தக் கட்சிகள், உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி கொண்டிருக்கிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை உறுதிப்படுத்த தவறிவிட்டன.

இத்தகைய சூழலில் மாற்றுக் கொள்கைகள் இன்றியமையாத தேவையாக உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி அளிக்காதது, மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு என கூட்டாட்சி முறைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது அவற்றை வலுவாக எதிர்க்கிறது. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வகுப்புவாத நடவடிக்கைகளையும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திமுகவின் இத்தகைய நிலைபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

அதேநேரத்தில், நவீன தாராளமய பொருளாதார பாதையில் திமுக அரசு பயணித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல முக்கிய துறைகளில் வெளிமுகமை நிறுவனங்கள் வழியாக பணியமர்த்துவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காதது. சொத்துவரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியது போன்ற தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வது தவறானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தில் வேலையின்மை, நிரந்தர பணியிடங்கள் ஒழிப்பு, பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறை, பட்டியல் பழங்குடியின மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.

மேலும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது. காவல்துறை அத்துமீறல்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, இவற்றிற்கு எதிராக மக்கள் வலுவான ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக குரலெழுப்பி போராடும். கட்சி நடத்தும் போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து உறுதியான மக்கள் இயக்கம் கட்டுகிற பணியில் மார்க்சிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். மாநிலத்திற்குரிய நிதிபங்கீட்டை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தும் மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் பாதுகாப்பதற்கும் வலுவான குரலை எழுப்பிடும். 

இடதுசாரி ஜனநாயக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து கட்சி தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை விரிவான அளவில் திரட்டும். இடது மாற்றினை உருவாக்கிட நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராகவும் மக்களை பிளவுப்படுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுமிக்க வர்க்கப் போராட்டங்களை இதர ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்போடு மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.

அகில இந்திய அளவில் மாற்றாக உருவாகும் இடது ஜனநாயக அணியின் பகுதியாக தமிழகத்தில் வலுவான ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றினை கட்டமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடும். "ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடித்துவிட்டால் அது பௌதீக சக்தியாக மாறும்' என்பது பேராசான் காரல் மார்க்சின் கூற்று. இதற்கேற்ப தமிழகத்தில் இடதுமாற்றுக் கொள்கைகளை தமிழக மக்கள் ஆதரித்து இடதுசாரி இயக்கத்தை வலுப்பெறச் செய்திடுவார்கள்.

இதற்காக தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படவும். மக்கள் ஆதரவை உறுதியாக திரட்டிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த மேலான லட்சியத்தை அடைய தமிழக மக்கள் பேராதரவு நல்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டி கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்று மலரட்டும்.'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim pe shanmugam condemn to murasoli dmk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->