பாஜகவின் அஜெண்டா... கவனமா இருங்க! ஒன்னு கூட மிஸ் ஆக கூடாது - திமுகவினருக்கு முக ஸ்டாலின் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவதும், "இன்று (22-11-2024) சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கழகத் தலைவரும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.

நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். 

மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். 

ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கழகத்தில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள்.

ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும். கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள்.

மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக - உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MPs Meet CM MK Stalin Speech BJP Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->