வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியவில்லையா!....வேளச்சேரி குடியிருப்பு கையகப்படுத்துவதற்கு சீமான் கடும் கண்டனம்!
Do not you know it is aggression when you ask for votes seeman strongly condemns the acquisition of velachery residence
நாதக தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்குமுறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
சென்னை மாநகரில் ஆறு, ஏரி, கால்வாய், குளங்களை ஒட்டி வாழும் ஏழை-எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, ஏரிகளையும், நீர்வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, என அனைத்துச் சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
தமிழ்நாடு அரசு சென்னை வேளச்சேரி பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
English Summary
Do not you know it is aggression when you ask for votes seeman strongly condemns the acquisition of velachery residence