பாராளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி எம்.பி., கூடங்குளம் குறித்து எழுப்பிய கேள்வி., மத்திய அமைச்சர் பதில்.!
Dr Anbumani Ramadoss Question raised about Koodankulam
கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்க வேறு இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்று, இன்று மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., அவர்கள் எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.
கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்றும், அவற்றை சேமித்து வைப்பதற்காக மாற்று இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக வினா எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ‘’ கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைப்பதை தவிர்க்கும் வகையில் மாற்றுத் திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார். ‘’ அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் என்பது அணுக்கழிவு அல்ல. மாறாக அது அடுத்தக்கட்டத்தில் பயன்படுத்துவதற்கான எரிபொருளை தயாரிப்பதற்கான விலைமதிப்பற்ற ஆதாரம். அதை மறுபயன்பாட்டுக்கு தயார்படுத்துவதற்காக அதற்கென உள்ள அமைப்புக்கு அனுப்பப்படும் வரை அணு உலை வளாகத்தில், அணு உலையிலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளுக்கான சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அணுக்கழிவுகள் கூடங்குளம் அணு சக்தி வளாகத்தில் வைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை அரசு அறியுமா? என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினவியிருந்தார்.
அதற்கு விடையளித்த அமைச்சர் ஜிதேந்திர பிரசாத், ‘’ கூடங்குளம் அணுசக்தி திட்ட வளாகத்தில், பயன்படுத்த அணு எரிபொருட்களை சேமித்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை தாங்கும் வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அணுசக்தி வளாக பணியாளர்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் அந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Question raised about Koodankulam