கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Anbumani Ramadoss Say About Honorary Lecturers
உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும்.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை. கவுரவ விரிவுரையாளர்களில் யு.ஜி.சி. நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Honorary Lecturers