50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு., இந்த சிக்கலுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வுகாண வேண்டும் - Dr. அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss Say About Teacher Qualification Exam
50,000 பேர் வாய்ப்பு இழப்பர்: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இளம் கல்வியியல் பட்டப் படிப்புக்கான(பி.எட்) முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பி.எட் பட்டப் படிப்பை நடப்பாண்டில் முடிக்கவிருக்கும் மாணவர்கள் தகுதித்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பி.எட் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க ஆர்வமாக இருந்தனர். ஆனால், பி.எட் படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் பட வில்லை என்பதால், அவர்களால் இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை.
பி.எட் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாலே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியும். தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டில் பி.எட் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் முதலாமாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தான் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அவற்றின் முடிவுகள் வரும் 13-ஆம் தேதிக்குள் வெளியாகாது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்து விட்டது.
இதனால், பி.எட் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் பயிலும் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்களுக்கு தகுதித் தேர்வு வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. வழக்கமான அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் முதலாம் ஆண்டு மாணவர்கள், அந்த ஆண்டிற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். ஆனால், கொரோனா காரணமாகத் தான் 10 மாதங்கள் தாமதமாகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தாமதத்துக்கு கொரோனா ஊரடங்கு தான் காரணமே தவிர, மாணவ, மாணவியர் அல்ல. அதனால் அவர்கள் பாதிக்கப்படக்கூடாது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நடப்பாண்டிற்கான தகுதித் தேர்வை எழுத முடியாததை எண்ணி மாணவர்கள் கவலைப்படுவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. இந்த ஆண்டு தகுதித்தேர்வை எழுத முடியாவிட்டால், அடுத்து எப்போது எழுத முடியும்? என்ற வினாவுக்கு எவரிடமும் விடை இல்லை.
தமிழ்நாட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஆண்டுக்கு இரு தகுதித் தேர்வுகள் வீதம் மொத்தம் 20 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 4 முறை மட்டுமே தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2019&ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு, அதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடத்தப்படுகிறது. அடுத்தத் தேர்வு இன்னும் 5 ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்டால், அதுவரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெறக் கூட முடியாது என்பதால் தான், எப்படியாவது இந்த முறை தகுதித் தேர்வில் பங்கேற்று விட மாணவர்கள் முயல்கின்றனர்.
தமிழக அரசு நினைத்தால் இந்த சிக்கலுக்கு எளிதில் தீர்வு காண முடியும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிப்பது, பி.எட் பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுவது ஆகிய இரண்டில் ஒன்றை செய்தாலே இந்தச் சிக்கல் தீர்ந்து விடும். அதை செய்வதில் சிரமும் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது என்றாலும் கூட, விண்ணப்பங்கள் தான் பெறப்படுகின்றனவே தவிர, தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால் விண்ணப்ப தேதியை நீட்டிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.
அதேபோல், பி.எட் பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகளை அடுத்த இரு நாட்களில் வெளியிட அரசால் முடியும். முதலாம் ஆண்டு தேர்வுக்கான விடைத்தாள்கள் அந்தந்த கல்லூரியில் தான் திருத்தப்படுகின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் முதலாமாண்டில் சராசரியாக 80 மாணவர்கள் தான் படிக்கிறார்கள் என்பதால், விடைத்தாள்களை ஒரே நாளில் திருத்தி முடிவுகளை அறிவிக்கலாம்.... அதில் எந்த சிக்கலும் இல்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இம்மாத இறுதி வரை நீட்டிக்க ஆணையிட வேண்டும். அதற்குள் பி.எட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Teacher Qualification Exam