வன்னிய வீராங்கனை மறைவு., வேதனையின் உச்சத்தில் மருத்துவர் இராமதாஸ்.! சோகத்தில் மூழ்கிய பாமகவினர்.!
Dr Ramadoss Mourning to Savithiri Ammal
வீராங்கனை சாவித்திரி அம்மாள் மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வீராங்கனை சாவித்திரி அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சி மாவீரர்களின் கட்சி மட்டுமல்ல... வீராங்கனைகளின் கட்சியும் ஆகும் என்பதற்கு கும்மிடிப்பூண்டி சாவித்திரி அம்மாள் போன்றவர்கள் தான் எடுத்துக்காட்டு ஆவர். வன்னியர் சங்கம் தொடங்கிய காலம் தொட்டே, எனது பாதையில் தடம் மாறாமல் செயல்பட்டு வந்தவர் சாவித்திரி அம்மாள். சாவித்திரி அம்மாள் என்ற பெயரை உச்சரிக்கும் போதே வீரமும், தீரமும் தொற்றிக்கொள்ளும்.
வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி 1986-ஆம் ஆண்டு திசம்பர் 19-ஆம் நாள் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழ்நாடு காவல்துறையினரின் அனைத்து வகையான அடக்குமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றை முறியடித்து 5000-க்கும் கூடுதலான பாட்டாளிகள் அடங்கிய குழு கும்மிடிப்பூண்டி தொடர்வண்டி நிலையத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தியது.
அதனால், 5 மணி நேரம் தொடர்வண்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் சாவித்திரி அம்மாளும் ஒருவர். இது குறித்து நான் எழுதிய ‘‘சுக்கா... மிளகா...சமூக நீதி?’’ என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
வன்னியர் சங்க சார்பிலோ, பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலோ எந்த போராட்டம் நடத்தப்பட்டாலும் அங்கு முதலில் வருபவர் சாவித்திரி அம்மாள் தான். ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர். துணிச்சலுக்கு பெயர் பெற்றவர். அதனால் தான் அவர் வீராங்கனை ஆனார்.
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்மிடிப்பூண்டிக்கு நான் எப்போது சென்றாலும் தவறாமல் என்னை சந்திப்பார். கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெறும் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டங்களில் அவர், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தாலும், சத்தியவான் சாவித்திரி எங்கே? என்று கேட்டு, மேடையில் எனக்கு அருகில் அமர வைத்து அங்கீகரிப்பேன். அர்ப்பணிப்புடன் ஒருவர் எவ்வாறு கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அம்மாள்.
சாவித்திரி அம்மாளின் மறைவு செய்தி அறிந்ததும், அவரது இரு மகள்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சி மீதும் சாவித்திரி அம்மாள் கொண்டிருந்த பற்றை விளக்கிய அவர்கள், ‘‘இப்போது கூட அய்யா வந்திருக்கிறார் என்று கூறினால், அம்மா எழுந்து உட்கார்ந்து விடுவார் அய்யா’’ என்று கூறினார்கள். அதைக் கேட்டு எனது கண்கள் குளமாயின. என் மீது சாவித்திரி அம்மாள் எந்த அளவுக்கு பாசமும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதற்கு இதுவே உதாரணம். சாவித்திரி அம்மாளின் மறைவு பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
வீராங்கனை சாவித்திரி அம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சாவித்திரி அம்மாளுக்கு நேரில் மரியாதை செலுத்த வேண்டும் என்றாலும் காலமும், சூழலும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சாவித்திரி அம்மாளின் இறுதிச் சடங்குகளில் பா.ம.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to Savithiri Ammal