பெண் குழந்தைகளை நான் தெய்வம் என்று சொல்ல அந்த ஒரு சம்பவம் தான் காரணம் - மனம் திறந்த மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Say About Daughter and father
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அவ்வபோது தனது வாழ்வின் முக்கிய நினைவுகளை முகநூல் பதிவுகளில் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவரின் முகநூல் பதிவில்,
"பெண் குழந்தைகள் தான் பெண் தெய்வங்கள்!
தமிழ்நாட்டில் எனது கால்கள் படாத கிராமங்களே இருக்க முடியாது. 7 ஆயிரத்திற்கும் கூடுதலான கிராமங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்திருக்கிறேன்.
அந்த திருமண விழாக்களில் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் பல நிகழ்வுகள் நடந்தேறும். ஒரு திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான் சென்றிருந்த போது, அங்கு ஒரு 75 முதல் 80 வயதுடைய பெரியவர் ஒருவர் புத்தாடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
அவரது மகிழ்ச்சிக்கான காரணம் குறித்து அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவருக்கு அருகில் அமர்ந்து விசாரித்தேன். அதற்கு அவர், ‘’ ஊரிலிருந்து என் பெரிய குழந்தை வருகிறது. அதனால் தான் இவ்வளவு மகிழ்ச்சி” என்றார்.
அவரது மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டது. அப்படியா... உங்கள் பெரிய குழந்தைக்கு எத்தனை வயது? என்று கேட்டேன். அதற்கு அவர், ‘’எனக்கு மொத்தம் 3 குழந்தைகள். அவர்களில் மூத்த பெண் குழந்தைக்கு இப்போது வயது 60” என்றார். அவரது பதிலைக் கேட்டு வியந்து போனேன்.
உண்மை தான்... தந்தைகளுக்கு தங்களின் பெண்கள் எப்போதும் குழந்தைகள் தான். மகள்களுக்கு 70 வயது ஆனாலும், அவர்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகளை எடுத்தாலும் கூட அவர்களை தந்தைகள் குழந்தையாகத் தான் பார்ப்பார்கள். சில தருணங்களில் அவர்கள் தந்தைகளுக்கு தெய்வமாகவும் தோன்றுவார்கள்.
இதை உணர்ந்த பிறகு தான் நான் பெண் குழந்தைகளை பெண் தெய்வங்கள் என்று அழைக்கத் தொடங்கினேன். மற்றவர்களும் அதே போல் அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். என்னைப் பின்பற்றி லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும் பெண் குழந்தைகளை பெண் தெய்வங்கள் என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சந்தேகமேயில்லை... பெண் குழந்தைகள் தான் பெண் தெய்வங்கள்!
English Summary
Dr Ramadoss Say About Daughter and father