தமிழகத்தில் இருந்து முதல் குரல் - மத்திய அரசிடம் தமிழ் இனத்திற்கான முக்கிய ஆலோசனையை வழங்கிய மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும், அந்த நாட்டிற்கு உதவுவது குறித்தும் தீர்மானிப்பதற்காக  தில்லியில் நாளை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் நிபந்தனைகள் இல்லாமல் செய்யப்படும் உதவிகள் அங்கு நிலவும் இனப்பாகுபாட்டை அதிகரிக்கவே வகை செய்யும் என்பதால், அதை உணர்ந்து மத்திய அரசு உத்திகளை வகுக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே சுட்டிக் காட்டியவாறு இலங்கையில் பொருளாதார நெருக்கடி தானாக ஏற்பட்ட ஒன்றல்ல. ஈழத்தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கில் இராணுவத்திற்கு பெருந்தொகை செலவிடப்பட்டதும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான போருக்கு உதவிய நாடுகளுக்கு இலங்கையின் வளங்களை தாரை வார்த்ததும் தான் இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம்.

இந்தியா தவிர வேறு அண்டைநாடுகள் ஏதுமில்லாத இலங்கை ஒரு மிகப்பெரிய இராணுவத்தை பெரும் பொருட்செலவில் நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. வடக்கிலும் கிழக்கிலும்  ஈழத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்தவே இலங்கையின் இராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கை இலங்கை மாற்றிக் கொள்ளாத வரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் அந்த நாட்டு மக்களுக்கு உதவாது; மாறாக இராணுவத்திற்கு தீனி போடுவதற்கே உதவும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களுக்கு இந்தியாவே நிதி உதவி அளிப்பது தீராதப் பழியாக அமைந்து விடக் கூடும்.

இத்தகைய பழியைத் தடுக்க வேண்டும் இலங்கை அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கு அந்த நாட்டு அரசு உடன்படும் பட்சத்தில் மட்டுமே உதவிகளை வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக இலங்கை மக்களின் அடிப்படைத் தேவைக்கான உணவு, மருந்து பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட உதவிகளைத் தான் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்த போதும் கூட, தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கைவிடவில்லை. இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2022 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியது. இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.

இனவெறி கோட்பாட்டை ஒழிக்காதவரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி வன்முறைகளுக்கு முடிவுகட்டாமல், பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏற்படாது. வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை குறைத்தல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் தவிர்த்து மற்ற உதவிகளை இந்தியா செய்ய வேண்டும். இதையே இந்தியாவின் கொள்கையாக  அறிவிப்பது குறித்து நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பிறகு 120-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகம் வந்துள்ளனர். அவர்களை அகதிகளாக அறிவிக்க முடியாததால் அவர்களுக்கு எந்த உதவியையும் தமிழக அரசால் வழங்க முடியவில்லை. இது குறித்த தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அகதிகளாக அறிவிப்பதற்கான விதிகளை தளர்த்தி, அவர்களை அகதிகளாக அறிவிப்பது குறித்தும் நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.

மற்றொருபுறம், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து 2021 மார்ச் 23-ஆம் தேதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51-ஆம் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. மேலும், இலங்கை மீதான புதிய தீர்மானம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. இக்கூட்டத்தொடரின் போது, தமிழர்களுக்கு நீதி வழங்கும் நோக்கிலும், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்தும் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About India Help Sri lanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->