இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந் வாழ்த்துக்கள் - மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss wish Ramalan 2022
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள இரமலான் வாழ்த்துச் செய்தி :
மனிதர்கள் அறநெறிகளை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும்’’ என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இரலான் திருநாள் என்பது ஒரு கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது பாடம் கற்கும் காலம் ஆகும். மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாடங்களும் நோன்புக்காலத்தில் இயல்பாகவே நோன்பாளர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாமல் இருத்தல் ஆகியவை நோன்புக் காலத்தில் எவரும் கட்டாயப்படுத்தாமலேயே இஸ்லாமியர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள். அந்த வகையில் இரமலான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாள் என்பதில் ஐயமில்லை.
இரமலான் கற்றுத் தரும் இந்த பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. அத்தகையதொரு நிலை உருவாகவும், உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
English Summary
Dr Ramadoss wish Ramalan 2022