500 டாஸ்மாக் கடைகள் மூட.. 2000 தனியார் மனமகிழ் மன்றங்கள் காரணம்.. பகீர் கிளப்பும் புதிய தமிழகம்.!!
DrKrishnasamy alleges 500 Tasmac shops closure reason 2000 private bars
தமிழகத்தில் 500 மதுகடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்..குறைந்த வருவாய் உள்ள கடைகள், பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி "10 பேர், 20 பேர் சேர்ந்து கொண்டு மனமகிழ் மன்றம் துவங்கலாம். எங்கெல்லாம் நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் பேருந்து நிலையங்கள் உள்ளதோ அங்கெல்லாம் புற்றீசல் போல மனமகிழ் மன்றங்கள் உருவாகியுள்ளன.
டாஸ்மார்க் பார்கள் அல்லாது தனியார் பங்களிப்போடு மதுபானம் விற்பனை செய்ய 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2000 மனமகிழ் மன்றங்களுக்கு செந்தில் பாலாஜி அனுமதி வழங்கியுள்ளார். இவர் அறிவித்துள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா.?
இந்த மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து உரிமம் பெற்றுள்ளனர். ஆனால் மனமகிழ் மன்றங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இருந்தால் இவர்களுக்கு வியாபாரம் ஆகாது என்பதால் எங்கெல்லாம் இவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளாரோ அங்கெல்லாம் உள்ள டாஸ்மாக் கடைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி மூடுகிறார்.
அதற்கான கணக்கெடுப்பை தான் தற்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குள்ளும் ஊழல் மட்டுமே ஒளிந்திருக்கும். தமிழக மக்களின் நலன் ஒளிந்திருக்காது. இவர்கள் மூடக்கூடிய டாஸ்மாக் கடைகள் எல்லாம் இவர்கள் அனுமதி வழங்கிய மனமகிழ் மன்றங்கள் நன்றாக ஓட வேண்டும். அதன் மூலம் நாளொன்றுக்கு 10 லட்சம், 20 லட்சம் என சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்தக் கடைகளை மூடுகிறார்.
எனவே இந்த விவகாரத்திலும் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவரின் 500 டாஸ்மாக் கடைகள் மூடுவது என்பது அவருடைய நலனுக்காக தான் என்பதே தவிர தமிழக மக்களின் நலனுக்கானதோ, டாஸ்மாக் நிறுவனத்தின் நலனுக்கானதோ அல்ல" என காணொளி வாயிலாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "2000 மனமகிழ் மன்றங்களுக்கு (FL2 License for Pro recreational clubs) அனுமதி அளித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகள் மூடும் அறிவிப்பு ஏமாற்று வேலையே!அரசு வருமானத்தை திமுகவினருக்கு திசைதிருப்பும் திட்டம் இது" என பதிவிட்டுள்ளார்
English Summary
DrKrishnasamy alleges 500 Tasmac shops closure reason 2000 private bars