கொடைக்கானல் பாச்சலூர் சிறுமி மர்மக்கொலை., சிபிஐ விசாரணை கோரும் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் பள்ளி வளாகத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கிய ஒரு கொலை வழக்கின் விசாரணை இந்த அளவுக்கு மந்தமாக இருப்பது கவலையளிக்கிறது.

கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 15&ஆம் தேதி பள்ளிக்கட்டிடத்திற்கு பின்புறத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அந்த பெண் பிஞ்சு உயிரிழந்து விட்டது. இந்தக் கொடுமை நிகழ்ந்து 8 நாட்கள் ஆகியும் கூட இது குறித்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சிறுமி மர்மக் கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதைத் தவிர வேறு எவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தியதாகத் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை காவல்துறை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறது. 

இது உண்மை என்றால் மன நிறைவு அளிக்கும் விஷயம் தான். அடுத்தக்கட்டமாக, சிறுமியை எவரும் கொலை செய்யவில்லை; அந்த சிறுமியே உடலில் எரிபொருளை ஊற்றி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற செய்தி பாச்சலூர் பகுதியில் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. 9 வயது சிறுமி  காலையில் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வருகிறாள்; 

உணவு இடைவேளைக்கு முந்தைய இடைவேளையில் வழக்கம் போல மற்ற மாணவிகளுடன் வெளியில் வந்த மாணவி, அவரே உடலில் எரிபொருளை ஊற்றி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது நம்பும்படியாக இல்லை.  கொலையாளிகளைக் காப்பாற்ற திட்டமிட்டே இப்படி ஒரு வதந்தி பரப்பப்படுகிறதோ? என்ற ஐயம் தான் இதைக் கேட்கும் போது எழுகிறது.

சிறுமியை கொலை செய்த கொலையாளியை கைது செய்து தண்டிக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று பாச்சலூர் கிராம மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு அனுப்ப  மறுத்து விட்டனர். 

இது தொடர்பாக பாச்சலூர் மக்களை சமாதானப்படுத்துவதற்காக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசனின் கால்களில், கொல்லப்பட்ட குழந்தையின்  தாத்தா விழுந்து கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், எந்த பயனும் இல்லை. சிறுமியின் தந்தை நடத்தி வரும் போராட்டத்தாலும் பயன் விளையவில்லை.

காவல்துறையினர் நினைத்தால் கொலையாளிகளை இந்நேரம் கைது செய்திருக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் கூட உண்மையாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. சிறுமி கொலை வழக்கில் காவல்துறை விசாரணை இவ்வளவு மந்தமாக இருப்பதற்கான காரணமும் தெரியவில்லை. கொல்லப்பட்ட சிறுமி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே விசாரணையில் அலட்சியம் காட்டக்கூடாது.

சிறுமி கொலை செய்யப்பட்ட நிகழ்வு அரசு பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து தண்டனை பெற்றுத் தரவில்லை என்றால் அரசு பள்ளிகள் பாதுகாப்பற்றவை என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். அது கிராமப்புற ஏழை, பெண் குழந்தைகளின் கல்வியில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். 

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சுமார் 50 லட்சம் மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள்  சேர்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அரசு பள்ளிகளுக்கு இப்படி ஒரு அவப்பெயர் ஏற்படாமல் அரசு தடுக்க வேண்டும்.

பாச்சலூர் சிறுமி மர்மக்கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை கண்காணிப்பாளர் நிலையில்  உள்ள ஒருவரை மேற்பார்வை அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதிலும் குறிப்பிடும்படியாக எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Need CBI Enquiry For Pachalur Child Murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->