#BigBreaking || தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% அரசு கல்லூரி கட்டணம்: தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை.!
DrRamadoss Say About MBBS seet In Private College Fees Issue
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு அரசு கல்லூரிகளின் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தை தமிழகத்திலுள்ள தனியார் கல்லூரிகளில் செயல்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் 2019-ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் 10(1)(ஐ) பிரிவின் கீழ் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டணம் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் அமைத்த வல்லுனர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 50% இடங்களுக்கு அந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆணையம் ஆணையிட்டுள்ளது.
அரசு கல்லூரிகளுக்கு இணையான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ள 50% இடங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மருத்துவ ஆணையம் வழிகாட்டியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50% அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அதில் முதல் 50% இடங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.
ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு, மீதமுள்ள கட்டண சலுகை இடங்கள், மற்ற மாணவர்களில் தகுதி அடிப்படையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அவற்றில் ஏழை மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்தது.
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.13,610 மட்டுமே. இது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜிக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட குறைவாகும்.
தனியார் கல்லூரிகளில் 50% முதல் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தனியார் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் ஏழை மாணவர்களால் சேர முடியவில்லை. இனி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் ஏழை & நடுத்தர மாணவர்களும் எளிதாக மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் கட்டண நிர்ணய அதிகாரம், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழுவுக்குத் தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் இந்த கட்டண நிர்ணயக் குழுக்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதற்கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில், கல்லூரி ஒதுக்கீட்டு பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிக அளவில் ஒதுக்கப்படும் இரண்டாம் கட்ட கலந்தாய்வும் அடுத்த சில வாரங்களில் நிறைவடைந்துவிடும். அதற்குள்ளாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்தக் கட்டண விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவது தான் மிகவும் அவசியமானதாகும். தனியார் நிகர்நிலை பல்கலை.களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலையில், 50 விழுக்காடு இடங்களுக்கு ரூ.13,610 மட்டும் வசூலிக்கப்பட்டால், அது ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆனால், தனியார் நிகர்நிலை பல்கலைகளைப் பொறுத்தவரை, அவற்றின் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசு தான் நடத்துகிறது; கட்டணத்தையும் மத்திய அரசே நிர்ணயிக்கிறது. இத்தகைய சூழலில், அவற்றில் உள்ள 50% இடங்களுக்கு அரசு கட்டணத்தை யார் நிர்ணயிப்பது? என்ற வினா எழுகிறது. மத்திய அரசுடன் தமிழக அரசு பேசி தனியார் நிகர்நிலைப் பல்கலை.களில் 50% இடங்களுக்கான கட்டணம் குறித்த தெளிவான ஆணைகளையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
DrRamadoss Say About MBBS seet In Private College Fees Issue