தூத்துக்குடி தாய்,மகள் கொலை வழக்கு - குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்.!
accuest arrested for thoothukudi mother daughter murder case
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் பூவன் - சீதாலட்சுமி தம்பதியினரின் மகள் ராமஜெயந்தி. இவர் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதனால் ராமஜெயந்தி, தாயார் சீதாலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இருவரும் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போனது. இதனால், மர்மநபர்கள் வீடுபுகுந்து அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து சுமார் 10 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி, முத்துலாபுரம் வைப்பாற்று படுகை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் 6 டிரோன் கேமராக்களை காட்டுப்பகுதியில் பறக்கவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய முனீஸ்வரன் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முனீஸ்வரனுக்கு தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முனீஸ்வரன் வெட்டியதில் காயமடைந்த போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
accuest arrested for thoothukudi mother daughter murder case