#திருவண்ணாமலை || ஏழை பாட்டாளியின் மகள் எம்பிசி பிரிவில் 3வது இடம் : பெரும் மகிழ்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


மருத்துவக்கல்வி தரவரிசைப் பட்டியலில் 7-ஆவது இடம் பிடித்த தமிழ்ப்பிரியா போல், பல மாணவ - மாணவியர்கள் வளர்ந்தால் தான் தமிழகம் முன்னேறும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள முகநூல் பதிவில், "தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான  7.5% இட ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் , திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், காராப்பட்டு அம்மியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த  ஏ. தமிழ்ப்பிரியா என்ற மாணவி 7-ஆவது இடம் பிடித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கிறார். 

இவர் நீட் தேர்வில் 467/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு புகழ்பெற்ற மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். மிகவும் பின் தங்கிய மாவட்டத்தின் குக்கிராமத்தில் மிகச்சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ள  மாணவி தமிழ்ப்பிரியா அவரது குடும்பத்தினரை பெருமிதத்துக்கு உள்ளாக்கியுள்ளார். 

தமிழ்ப்பிரியா போன்ற மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தான் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடினோம்; அதே காரணத்திற்காகவும், அதே நோக்கத்திற்காகவும் வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறோம். சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான அந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம்; இலக்கை அடைவோம்.

தமிழ்ப்பிரியாக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டும். இவர்கள் மருத்துவம் படித்தால் கிராமப்புற, ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம் எளிதாக கிடைக்கும். தமிழ்ப்பிரியாக்கள் வளர்ச்சியடைந்தால் தான் தமிழ்நாடு முன்னேறும்.  அதற்காகத் தான் 42 ஆண்டுகளாக சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்ப்பிரியாவின் தேர்ச்சி குறித்து தகவல் கிடைத்தவுடன் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். தமிழ்ப்பிரியா போன்று தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் இருந்தும், ஏழைக் குடும்பங்களில் இருந்தும், அரசு பள்ளிகளில் படித்தும் மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கும் பாட்டாளி குடும்பத்து மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்  எனது வாழ்த்துகள், பாராட்டுக்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Wish Thiruvannamalai mbbs student TamilPriya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->