எடப்பாடி பழனிசாமியிடம் விவசாய சங்கத்தினர் மனு!
Edappadi Palaniswami petitioned by farmers association
சேலத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமியிடம் ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கேட்டு, கோரிக்கை மனு வழங்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பி.ஆர் பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர், ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரி அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சென்று வலியுறுத்தினர்.
அதன்படி, ஒகேனக்கல் ஆற்றின் அருகே ராசிமணலில் காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்றும், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு, ராசிமணலில் அணை கட்டும் திட்டத்துக்காக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் ஆதரவு திரட்டி வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணு தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து, அவரிடம் கோரிக்கை மனு வழங்கினர். ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கொடுக்க வேண்டும், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்கட்டமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்து, அவரிடம் ஆதரவு கேட்டுள்ளோம். அடுத்து, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளோம்.
மேலும், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க, கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீது வழக்குத் தொடர்வோம்" என்றனர்.
English Summary
Edappadi Palaniswami petitioned by farmers association