NLC நிறுவனத்திற்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம் இரண்டாம் கட்ட சுரங்க விரிவாக்க பணிக்காக நேற்று கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்கள் மத்தியில் நெற்பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எல்.எல்.சி நிறுவனத்தின் செயலுக்கு திமுக அரசு துணை போவதாக குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

அதிமுக 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்எல்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மக்கள் விரோத விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு விவசாயிகளையும் அப்பகுதி மக்களையும் இந்த அரசு கைவிட்டு விட்டு, என்எல்சியின் நிலை எடுப்புக்கு காவலர்களின் உதவியுடன் துணை நிற்கிறது.

விவசாயிகளுடைய கோரிக்கை என்னவென்றால்,

1) மறுசீரமைப்பு மற்றும் மறு குடியமர்வு சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு வழங்குதல்.

2) வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார தொகை வழங்குதல்.

3) என்எல்சி நிறுவன நிலை எடுப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காலகாலமாக வேலை செய்து வரும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து என்எல்சி நிறுவனம் விரைவில் முடிவினை அறிவிக்க கோருதல்.

4) ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வீடுகளை கொடுத்து இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு என்எல்சி நிறுவனம் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றி தரவில்லை, அந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

5) 1989க்கு பிறகு நிலம் கொடுத்தவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு கூட நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவில்லை. எனவே அப்போது முதல் இன்று வரை நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

6) நிலை எடுப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு சி எஸ்.ஆர் நிதி என்று சொல்லப்படுகிற சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து எவ்வித வளர்ச்சித் திட்டங்களையோ நல உதவி திட்டங்களையும் செய்து தரவில்லை. எனவே சி.எஸ்.ஆர் நிதி முழுமையாகவோ அல்லது பெரும் பகுதியோ கடலூர் மாவட்டத்திற்கு செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் என்எல்சி நிறுவனத்திடம் வைத்துள்ளனர். 

ஆனால் இது குறித்து எந்தவித நியாயமான பதிலும் அழைக்கப்படாத நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விடியோ தி.மு.க அமைச்சர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளை திமுக விவசாயிகள் மற்றும் திமுக அல்லாத விவசாயிகள் என்று இரண்டாக பிரித்து திமுக அல்லாத விவசாயிகளை பழி வாங்குவதற்கு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்று செய்திகள் தெரிய வருகிறது.

கடந்த மே மாதம் இரண்டாம் தேதி அன்று அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்எல்சி நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற புவனகிரி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் என்எல்சி நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டு தான் நிலை எடுப்பு செய்யப்பட வேண்டும் என உறுதிப்பட எடுத்துரைத்தார். 

அதனை ஏற்றுக் கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர் விரைவில் மற்றொரு பேச்சு வார்த்தை சென்னையில் நடைபெறும் எனவும் அதுவரை எந்தவித நிலை எடுப்பு பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் என்எல்சி நிர்வாகத்தை பணித்தார். ஆனால் தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்எல்சி நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நிலம் எடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு விடியா திமுக அரசு துணை நின்றுள்ளது. 

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிப்பதற்கு இந்த விடியா திமுக அரசுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளை நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல் தற்போதைய விலை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி நிர்வாகத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி விவசாயிகளையும் விவசாயத்தை அழிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் செயலுக்கும் துணை போகின்ற விடியோ திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். 

தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புவனகிரி தொகுதிக்குட்பட்ட 37 கிராமங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கை நாள் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து 03.01.2019 அன்று சட்டப்பேரவை வீதி எண் 55 இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தற்போது முதலமைச்சரான உடன் காவல்துறையின் உதவியுடன் என்எல்சி நிர்வாகத்திற்கு நிலங்களை கையகப்படுத்துகின்றனர். மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு தற்போது விடியா அரசின் முதல்வரானவுடன் ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடல அரசு. விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவு எடுத்துவிட்டு நிலம் எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்எல்சி நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns DMK govt for supporting to NLC land acquisition


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->