திறமையற்ற முதல்வரும்... "ஓ" போடும் தமிழக டி.ஜி.பியும்.. போட்டு தாக்கிய ஈபிஎஸ்..!!
EPS has criticized TN DGP and MKStalin
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்த அமரன் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததால் தற்பொழுது வரை 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சுமார் 60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி "தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோன்ற கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலும் இதை பற்றி நான் கேள்வி எழுப்பினேன்.
தமிழக டிஜிபி அவர்கள் கஞ்சா வேட்டை 2.0 என கஞ்சா விற்பனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். பிறகு 3.0 என அறிவித்தார், சமீபத்தில் 4.0 என அறிவித்துள்ளார். இப்படி "ஓ" போடுவது தான் அவருடைய வழக்கமே தவிர சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை.
ஒரு திறமையற்ற முதலமைச்சரால் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவது தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
EPS has criticized TN DGP and MKStalin